Saturday, November 19, 2011

கூடங்குளம்:பேச்சுவார்த்தை தோல்வி



kudumkulam
கூடங்குளம்:கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னை தொடர்பாக மத்திய, மாநில குழுக்கள் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
போராட்டக் குழுவினரின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளித்துவிட்டதாக மத்திய நிபுணர் குழுவினரும், போராட்டம் தொடரும் என போராட்டக் குழுவினரும் தெரிவித்தனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் அப்பகுதி மக்கள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்திவரும் நிலையில், இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாதது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் மத்திய நிபுணர் குழு சார்பில் ஏ.இ.முத்துநாயகம் உள்ளிட்ட 13 பேரும், மாநிலக் குழு சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.செல்வராஜ் மற்றும் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த புஷ்பராயன் உள்ளிட்ட 5 பேரும் பங்கேற்றனர். கூட்டத்தில், அணுஉலை பாதுகாப்பு தொடர்பாக மாநிலக் குழுவில் இடம்பெற்றுள்ள போராட்டக் குழுவினரின் கேள்விகளுக்கு மத்திய குழுவினர் விளக்கங்களை அளித்தனர். இருப்பினும், அந்த விளக்கங்கள் போராட்டக் குழுவினருக்குத் திருப்தியளிக்கவில்லை என்று தெரிகிறது. 2 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எதுவும் எட்டப்படவில்லை.



பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த புஷ்பராயன் போராட்டம் தொடரும் என அறிவித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது: “அணுஉலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்பதே எங்களது ஒரே குறிக்கோள். நிபுணர் குழு அளித்த பதில்கள் எங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை.
அணுஉலையில் பணிகள் நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியும், பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஆனால், இதை நிபுணர் குழுவினர் மறுத்தனர். 40 பேர் மட்டுமே பராமரிப்புப் பணியில் ஈடுபடுவதாகக் கூறினர். ஆனால், அங்கு 400 பேர் பணியாற்றுவதை நாங்கள் நிரூபித்தோம். இதிலிருந்தே அவர்கள் உண்மைக்கு மாறான தகவல்களைத் தெரிவிப்பதை உணர்ந்து வெளியேற முற்பட்டோம். ஆட்சியர் எங்களைத் தடுத்து, இதுதொடர்பாக சிறப்பு வட்டாட்சியரை நியமித்து ஆய்வு செய்வதாக உறுதியளித்தார். எல்லா வகையிலும் அணுஉலை பாதுகாப்பானது என்று தெரிவித்தனர். வெறும் வார்த்தையில் இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? நிபுணர் குழுவிடம் இருந்து முழுமையான பதில் எங்களுக்குக் கிடைக்கவில்லை.
மக்களின் அச்சத்தைப் போக்க எந்தவித ஆவணங்களையும் அவர்கள் அளிக்கவில்லை. எங்களைப் பொறுத்தவரை பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துவிட்டது. இனி பேச்சுவார்த்தையில் பங்கேற்க எந்த முகாந்திரமும் இல்லை. இதை மக்களிடம் தெரிவிப்போம். எங்களது போராட்டம் தொடரும்” என்றார்.

No comments:

Post a Comment