கராச்சியில் பிறந்து இந்தியாவில் குடியேறிய லால் கிருஷ்ணா அத்வானியின் பிரதமர் பதவி மீதான தீராத மோகத்தால் உருவான ஜன சேதனா யாத்திரை நமத்துப்போன பட்டாசு போல டெல்லியில் பிசுபிசுத்து போனதில் எவருக்கும் கவலை இருப்பதாக தெரியவில்லை. இந்த யாத்திரை தோல்வியை தழுவியதில் அதிகம் மகிழ்ச்சி அடைபவர்கள் அவரது கட்சியான பா.ஜ.கவை சார்ந்தவர்களே ஆவர்!
ஊழலுக்கு எதிரான மத்திய தர வர்க்கத்தினரிடையே வீசும் எதிர்ப்பு அலையை தீவிர வலதுசாரி ஹிந்துத்துவாவுக்கு சாதகமாக்கி மீண்டும் அதிகாரத்தின் ஏணிப் படியாக மாற்றுவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக அத்வானி ரதயாத்திரைக்கு கிளம்பினார். முன்பு இதே அத்வானி நடத்திய ராம ரதயாத்திரையின் மூலம் சிறுபான்மை முஸ்லிம்களின் குருதியால் இந்திய தேசம் வன்முறைக் காடாக மாறியதை யாரும் மறந்துவிட முடியாது.
1990-ஆம் ஆண்டு அத்வானி சோமநாதபுரத்திலிருந்து துவக்கி வைத்த முதல் யாத்திரை 3 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களின் படுகொலையுடன் முடிவடைந்தது. அவற்றுடன் ஒப்பிடுகையில் தற்போதைய ஊழல் எதிர்ப்பு ரத யாத்திரை அமைதியாக நடந்தது என கூறலாம். அதற்கு காரணம், ஆர்.எஸ்.எஸ்ஸின் வன்முறை மனோநிலையை கொண்ட பிரிவினர் இந்த யாத்திரைக்கு போதுமான ஆதரவை அளிக்காததே ஆகும்.
பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுத்துதான் அடிக்கடி வழியில் பஞ்சரான ரதயாத்திரைக்கு பா.ஜ.க உற்சாகம் அளித்தது. வெடிக்குண்டு கைப்பற்றப்பட்டதாக ஒரு சில செய்திகள் வெளியானதும், ஜெயலலிதாவின் ஒத்துழைப்புடன் ஒரு சில ‘பயங்கர….வாதிகள்(?)’ கைதுச் செய்யப்பட்டாலும் அதனால் எவ்வித பலனும் ஏற்படவில்லை.
டெல்லியில் ஜெயின் சகோதரர்களிடமிருந்து ஹவாலா பணத்தை கைப்பற்றிய நற்பெயரும் அத்வானிக்கு உண்டு. அன்று ஹவாலா மோசடியில் சிக்கியவர்கள் தேசிய தலைவர்கள் என்பதால் ஜே.கே.ஜெயினின் டைரிக் குறிப்பு ஆதாரமாக ஏற்றுக் கொள்ளபடவில்லை.
அத்வானியின் செல்வாக்கு கொடிக்கட்டி பறந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியின் போது பொதுச் சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்க்க தனியாக அமைச்சகம் ஒன்று துவங்கப்பட்டது. தலித்-சிறுபான்மை எதிர்ப்பாளரான அருண்சோரிதான் இத்துறைக்கு அமைச்சராக அதாவது இடைத்தரகராக செயல்பட்டார்.
கனிமொழியும், ஆ.ராசாவும் சிறையில் அடைக்கபடுவதற்கு காரணமான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் துவங்கியதும் பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ ஆட்சியின் போதுதான். பாதுகாப்புத் துறையிலும், கார்கில் போரில் இறந்துபோன ராணுவ வீரர்களின் உடல்களை கொண்டுசெல்வதற்கு வாங்கிய சவப்பெட்டியிலும் கூட ஊழல் புரிந்து சாதனைப் படைத்த கட்சிதான் பா.ஜ.க. இத்தகைய புகழ்பெற்ற கட்சியின் முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமணன் லஞ்சமாக ஒரு கோடி ரூபாயை கைப்பற்றியதை டெஹல்கா தனது ரகசிய கேமராவில் பதிவுச் செய்தது.
குஜராத்தில் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடி பொதுச் சொத்துக்களை டாட்டாவுக்கும், அம்பானிக்கும் தாரை வார்த்துவிட்டு வளர்ச்சியின் நாயகனாக நடித்து வருகிறார்.
வடமாநிலங்களில் அத்வானி குளிரூட்டப்பட்ட ரதத்தில் ஊழலைக் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டிக் கொண்டிருக்கும் வேளையில்தான் பா.ஜ.கவின் தென்னக ஹீரோ எடியூரப்பா நிலமோசடி வழக்கில் கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இதற்கு முன்னர் சட்டவிரோத சுரங்கத் தொழில் மூலமாக 16 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பீட்டை ஏற்படுத்தியதாக லோக ஆயுக்தா குற்றம் சாட்டிய ஜனார்த்தன ரெட்டி சி.பி.ஐயால் கைதுச் செய்யப்பட்டுள்ளார். உத்தராகண்டில் அம்மாநில பா.ஜ.க முதல்வர் ரமேஷ் பொக்ரியால் பதவி விலக நேர்ந்ததற்கு ஊழல்தான் காரணம். இந்நிலையில் பா.ஜ.க ஊழலை குறித்து பேசுவதே காமெடியாகும். திருடனை குறைகூறும் கொள்ளையர்களுக்கு சமமானதுதான் பா.ஜ.க.
அக்கட்சியில் பிரதமருக்கான ஆடையை தைத்து இஸ்திரி போட்டு கசங்காமல் காத்து வரும் நரேந்திர மோடியும், கடுமையாக உடற்பயிற்சி மேற்கொண்டு உடலிலிருந்து ஊளைச் சதைகளை குறைத்து ஃபெய்ஸ் லிஃப்டிங் நடத்தி அழகனாக முயற்சிக்கும் நிதின் கட்கரியும், இளமையை இன்னமும் நாம் இழந்துவிடவில்லை என கருதும் முன்னாள் பல்கலைக்கழக பேராசிரியர் முரளி மனோகர் ஜோஷியும் எழுப்பும் சவால்களை சந்திக்க கூட ஜனசேதனா யாத்திரை அத்வானிக்கு உதவாது என்பதுதான் உண்மை.
அ.செய்யது அலீ.
1 comment:
இன்ஷா அல்லாஹ் நவம்பர் 28 இந்தியா மக்களின் இரண்டாவது சுதந்திரத்தின் ஆரம்பம்
Post a Comment