யமனில் ஒரு நல்ல மனிதர் வாழ்ந்து வந்தார். அறுவடை காலங்களில் அவரது தோட்டத்தைச் சுற்றிலும் ஊர்க்காரர்கள் ஒன்று கூடுவார்கள். அந்தத் தோட்டத்திலிருந்து கிடைக்கும் கனி வர்க்கங்களில் கணிசமான ஒரு பகுதியை அந்த நல்ல மனிதர் ஏழைகளுக்குப் பிரித்துக் கொடுப்பார். இந்த அழகிய தர்மம் மூலம் அவருக்கு செல்வம் இன்னும் அதிகரிக்கவே செய்தது.
ஆனால் அவருடைய குடும்பத்தார் அதனைப் புரிந்து கொள்ளவில்லை. ஊர்க்காரர்களுக்கு இவர் அள்ளி இரைப்பது அனைத்தும் தமக்கு ஏற்படும் இழப்பாக அவர்கள் கருதினார்கள். தந்தையைப் பிள்ளைகள் எதிர்த்தார்கள். இருந்தாலும் அவருக்கு உதவிகளும் செய்து வந்தார்கள்.
இதற்கிடையில் அந்த நல்ல மனிதர் மரணமடைந்தார். இப்பொழுது அனைத்து அதிகாரங்களும் பிள்ளைகளின் கைகளில் வந்தன. அறுவடை காலம் நெருங்கியது. கனிவர்க்கங்கள் கனிந்து வருவதைக் கண்ட அவர்களுக்கு அரிக்கத் தொடங்கியது. ஊர்க்காரர்கள் அறுவடை தினத்திற்காகக் காத்திருக்கிறார்கள். அவர்களை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும்.
குடும்பத்தார் ஆலோசனை செய்தனர். தந்தையின் தர்மத்தைத் தொடரவேண்டும் என்று ஒரு சிலர் மட்டும் கூறினர். ஆனால் அது பலஹீனமான குரலானது.
ஊர்க்காரர்களின் கண்களில் படாமல் ஒரே இரவில் கனி வர்க்கங்களை அறுவடை செய்துவிட வேண்டும். விடியும் முன் அதனைச் செய்து முடித்திட வேண்டும். தோட்டத்தில் நாசம் வந்துவிட்டது என்று மக்களை நம்புமாறு ஏதாவது செய்து தோட்டத்தின் தோற்றத்தை மாற்றிவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் இரகசியமாகப் பேசி முடிவெடுத்தார்கள்.
குறிப்பிட்ட தேதியில் அவர்கள் காரியங்களை அரங்கேற்றுவதற்காக தோட்டத்தை நெருங்கினார்கள். அங்கே அவர்களுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. என்னே கொடுமை! மரங்கள் கருகிக் கிடந்தன. அந்தத் தோட்டமே நாசமடைந்து கிடந்தது.
ஊர்க்காரர்களை ஏமாற்றுவதற்கு இவர்கள் போட்ட சதித் திட்டத்தை யாரோ அறிந்து முற்கூட்டியே அந்தத் தோட்டத்தை நாசப்படுத்தியது போல் இருந்தது.
தங்களின் தீய எண்ணங்களுக்குக் கிடைத்த தண்டனை இது என்று அவர்களுக்குப் புரிந்தது. சிலர் அதனைச் சொல்லவும் செய்தனர்.
செல்வத்தைப் பங்கு வைத்ததன் நன்மையையும், சுகத்தையும் அனுபவித்து அறிந்த அந்தக் குடும்பம் கஞ்சத்தனத்தின் கடும் பிடியில் சிக்கிய பொழுது அல்லாஹ் தலையிட்டான்.
இந்தச் சம்பவத்தைக் குறித்து பரிசுத்த குர்ஆனில் 68-வது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.
சில சமயங்களில் நாமும் இப்படிப்பட்ட ஒரு நிலைக்கு தகுதியாகி விடுகின்றோம். அல்லாஹ்வின் கருணை இல்லையென்றால் நாமும் அழிந்துதான் போயிருப்போம். அல்லாஹ் தன் தாராள குணத்தால் நம்மை விட்டு வைத்திருக்கின்றான்.
இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒரு தடவை தனக்கு உபதேசித்ததாக அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள் அஸ்மா (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:
“நீ செலவு செய்ய வேண்டும். செல்வத்தைக் கணக்குப் பார்த்து கணக்குப் பார்த்து சேர்த்து வைக்காதே. அப்படிச் செய்தால் உனது காரியத்தில் அல்லாஹ்வும் கணக்கு பார்ப்பான். செல்வத்தைப் பிடித்தும் வைக்காதே. அப்படிச் செய்தால் உனது காரியங்களில் அல்லாஹ் தடையாக நிற்பான்.” (முஸ்லிம்)
தான் கஞ்சன் என்று ஒரு நபரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அது நல்ல சுபாவமில்லை என்று எல்லோருக்கும் தெரியும். என்றாலும் செலவழிப்பதற்கு நம்மனம் சம்மதிப்பதில்லை. பணம் எடுப்பதுபோல் நம் கைகள் சட்டைப் பைக்குள் செல்லும். ஒன்றுமில்லாமல் வெறும் கைகளாகவே அது வெளிவரும்.
ஆனால் நன்கொடையாளர் அப்படியல்ல. தர்மம் கொடுக்கும் பொழுது அவர் மனதில் ஒரு நெருடலும் ஏற்படாது. அவரது பாதுகாப்பு வளையம் விசாலமானது. பணம் கைவிட்டுப் போனால் நாம் நசிந்து போவோம் என்று ஒருபொழுதும் அவர் அஞ்சியதில்லை.
எம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒரு தடவை இரு நபர்களை உவமையாகக் கூறினார்கள். அதாவது ஒரு கஞ்சனையும், ஒரு நன்கொடையாளரையும் பற்றிக் கூறினார்கள்: “இரண்டு நபர்களும் தங்கள் கைகளை நெஞ்சோடு சேர்த்து வைத்துள்ளார்கள். கைகளின் மேல் இரும்புக் கவசங்கள் இருக்கின்றன. செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தால் கொடையாளியின் கவசம் விசாலமாகும். அவரது கைகள் சுதந்திரமாகி விடும். மட்டுமல்ல. கால்கள் மூடும் அளவுக்கு கவசம் விசாலமாகி பாதுகாப்பு அளிக்கும்.
கஞ்சனின் நிலையோ… அவன் செலவழிக்க வேண்டும் என்று எண்ணினால் கவசம் இறுகும். கைகள் நசுங்கும் அளவுக்கு கவசம் இறுகிப் பிடிக்கும். கைகளைத் தோளோடு சேர்த்து கட்டி வைத்தது போலாகிவிடும்.”
இதனைச் சொல்லிவிட்டு இறைத்தூதர் தங்கள் இரு விரல்களை சட்டைப்பைக்குள் விட்டு அசைத்தார்கள். பின்னர் சொன்னார்கள்: “அவன் சட்டைப்பையைத் தடவுவதாக இருந்தாலும் அந்தக் கவசம் விரியாது.” (முஸ்லிம்)
MSAH
No comments:
Post a Comment