அமெரிக்கத் தடையை மீறி இந்தியா ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால் ரூ, 57,000 கோடியை மிச்சப்படுத்த முடியும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி யோசனை தெரிவித்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாகக் கூறி அந்த நாட்டுடன் எந்த வர்த்தகமும் செய்யக் கூடாது என்று ஐ.நாவில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்திருந்தது நினைவிருக்கலாம் எனினும் இந்தியா பழைய ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாங்குவதாகக் கூறி ஈரானிடம் வர்த்தகத்தைத் தொடர்ந்து வந்தது.
தற்போது ஈரானுடனான 27 சத எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியதும் ரூபாயின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாகச் சொல்லப்பட்டு வருகிற நிலையில், வீரப்ப மொய்லியின் யோசனை நல்லதாக அமையும் என்பதால் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் இந்த யோசனையை வரவேற்றுள்ளார்..
கடந்த ஆண்டு 13 மில்லியன் டன் கச்சா எண்ணையை ஈரானிடமிருந்து வாங்கியிருந்த இந்தியா, இந்த ஆண்டு, அமெரிக்கப் பார்வைக்கு பயந்து இதுவரை சுமார் 2 மில்லியன் டன் மட்டுமே வாங்கியுள்ளது. இதன் அடிப்படையில், மீதமுள்ள 11 மில்லியன் டன்னையும் தொடர்ந்து ஈரானிடமே வாங்குவதன் மூலம் ரூபாய் மதிப்புச் சரிவை ஈடுகட்ட முடியும் என்று வீரப்ப மொய்லி யோசனை தெரிவித்துள்ளார். தனது இந்த யோசனையை பிரதமர் மற்றும் நிதி அமைச்சரிடம் நேரிடையாகவே மொய்லி தெரிவித்துள்ளாராம்.
மற்ற நாடுகளிடமிருந்து வாங்கும் போது அமெரிக்க டாலரில் பணம் செலுத்தும் இந்தியா, ஈரானிடம் இந்திய ரூபாயிலோ, அல்லது ஏற்றுமதி வகையிலோ கணக்கு நேர் செய்கிறதாம்.
No comments:
Post a Comment