Sunday, September 1, 2013

டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: 17 வயது சிறார் குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை!

டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில், 17 வயதுடைய சிறார் குற்றவாளிக்கு டெல்லி சிறார் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியில் 23 வயது மருத்துவ மாணவி ஒருவர், கடந்த  டிசம்பர் 16 ஆம் தேதி இரவு தனது ஆண் நண்பருடன் பேருந்தில் சென்றபோது பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். டிசம்பர் 17 ஆம் தேதி இந்த சம்பவம் தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டனர். டிசம்பர் 20 ஆம் தேதி பீகாரில் பதுங்கியிருந்த ஐந்தாவது குற்றவாளி தாகூர் கைது செய்யப்பட்டார்.
டிசம்பர் 21 ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவி, சப்தர்ஜங் மருத்துவமனையில் உதவி கோட்ட மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்தார். டிசம்பர் 22 ஆம் தேதி, இதில் தொடர்புடைய 6வது குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

மாணவியின் உடல் நிலை மோசமானதால், உயர் சிகிச்சைக்காக 26 ஆம் தேதி இரவு சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி டிசம்பர் 29 ஆம் தேதி மாணவி உயிரிழந்தார்.
இதுத்தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இதில் ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். மீதமுள்ள 5 பேரில் ஒருவன் 17 வயதுடைய சிறார் என்பதால் அவர் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
விசாரணை முடிவுற்று, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லி சிறார் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை அளித்துள்ளது டெல்லி சிறார் நீதிமன்றம்.
இந்த 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையில், ஏற்கனவே சிறையில் இருந்த நாட்களும் கழிக்கப்பட்டு, மீதமுள்ள நாட்களுக்கான தண்டனையை மட்டுமே, இக்குற்றவாளி சிறார் சீர்திருத்த பள்ளியில் கழிப்பான். இதனிடையே இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, மேலும் 4 பேர் மீதான வழக்கு, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

No comments:

Post a Comment